Connect with us

Agriculture

இரசாயன உரங்களால் மலடான மண்ணை வளமுள்ளதாக மாற்ற சில வழிகள்.

சனத்தொகை பெருகும் போது தேவைகளும் அதிகரிக்கின்றது, மக்களுக்கு தேவை அதிகரிக்கும் போது விளைச்சலும் அதிகமாகத்தான் தேவைப்படுகின்றது. எனவே நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை விட்டுவிட்டு விளைச்சலை அதிகமாக எடுப்பதற்கு இரசாயன வேளாண்மைக்கு மாறுகின்றார். இப்படி பல வருட காலமாக விவசாய நிலங்களுக்கு இரசாயன செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி வந்ததால் மண்ணில் உள்ள உயிரினங்கள் அழிந்து அது மலட்டுத்தன்மை ஆகிவிட்டது.

தற்போது இதற்கு மாற்று வழியை தேடும் விவசாயிகளுக்கு சில குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம். இயற்கை வேளாண்மைக்கு பல எண்ணற்ற வழிகள் இருக்கின்றது அதில் தொழுவுரம், புண்ணாக்கு உரம், கம்போஸ்ட் உரம், பசுந்தால் உரம், மண்புழு உரம் என பல வழிகள் இருக்கிறது, சொல்லப்போனால் இயற்கை விவசாயத்துக்கு ஒரு எல்லையே இல்லை.

இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டுமென்றால் முதலில் மண் வளத்தை பெருக்க வேண்டும் மண் வளத்தைப் பெருக்குவது என்றால் என்ன? மண் வளமாக இருக்கின்றது என்பதை எதை வைத்து நாம் சொல்கிறோம்? உயிருள்ள மண் என்றால்? வளமான மண் என்று இங்கு கூறுவது பொலபொலப்பு தன்மையுடனும், அதில் அதிக நுண்ணுயிர்களும், மண்புழுவும் அதிகமாக வாழவேண்டும். அதேசமயம் ஊட்டமும் நிறைந்து இருக்க வேண்டும்.

இரசாயன உரங்களை பாவித்து மலட்டுத்தன்மை ஆகிப்போன  நிலங்களை பல வருட காலங்கள் காத்திருக்காமல் மிகக் குறுகிய காலத்தில் வளமான மண்ணாக மாற்றுவதற்கும் அதே சமயத்தில் அந்த மண்ணுக்கு ஊட்டமும் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

மண்வளத்தை மேம்படுத்துவதற்கு செடிகளை வளர்த்து அதன் தலைகளை அந்த மண்ணுக்கே உரமாக மாற்றுவதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சில குறிப்பிட்ட செடிகளை பயன்படுத்தி மண்ணுக்குத் தேவையான ஊட்டத்தை இம்மண்ணில் சேர்க்க முடியும், அதுமட்டுமில்லாமல் பலவிதமான விதைகளை விதைத்து அதையும் மண்ணில் சேர்க்கும்போது நல்ல ஊட்டம் கிடைக்கும், மண்ணுக்கு பொலபொலப்புத் தன்மை கிடைக்கும், மண் வளமும் பெருகும். இதற்குப் பெயர்தான் பல பயிர்ப் விதைப்பு என்று சொல்லுவார். இப்படியான விதைப்பதற்கு எந்த வகையான செடிகொடிகளை கொண்டு செய்யலாம் என்று பார்ப்போம்.

தானியங்கள், பயிறு வகைகள், பசுந்தாள் உரச் செடிகளை, எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பயிர்கள் என பல வகையான பயிர்களை பயன்படுத்தி குறைந்தது இரண்டு மாதத்திற்கு வளர்த்து அதை அப்படியே மடக்கி மண்ணில் சேர்க்க வேண்டும். பின்னர் இதை 10 நாட்களுக்கு மண்ணில் அழுக விட வேண்டும். இதனுடைய இலைச்சாறை தண்டு வேர் என அனைத்து பகுதியிலும் மண்ணோடு மண்ணாக சேர்ந்து அதில் இருக்கும் சத்துக்களை மண்ணுடன் கலக்கச் செய்யும். அப்படியே அது மங்கிப்போய் மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறிவிடும்.

இப்போது மண் வளத்தை பெருக்க வளரக்கூடிய செடி வகைகள் என்ன என்று பார்ப்போம்.

  • தானிய வகையில் சோளம், கம்பு, திணை, சாம, பனிவரகு என்பன அடங்கும்.
  • பயிர் வகையில் பாசிப்பருப்பு, உளுந்து, கொள்ளு, தோரை, தட்டப்பயிறு ஆகியவையும்
  • எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி, சோயா, ஆகியவையும்
  • வாசனை திரவியங்களில் வெந்தயம், மல்லி, சோம்பு, கடுகு, ஆகியவையும்
  • உரச் செடிகளை பார்த்தால் தக்கைப்பூண்டு, சணப்பு, குறிஞ்சி,

மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு வகையிலும் ஏதாவது நான்கு வகைச் செடிகளை பயிரிட்டு அதை மண்ணுக்கு உரமாக்கி மலட்டு நிலங்களை இயற்கையான, உயிருள்ள விளைநிலமாக மாற்றுங்கள்.

உயிர் உரம்

இயற்கை விவசாயத்துக்கு மாறும்போது முதலில் அதிக விளைச்சலை எடுப்பது ஒரு சவாலாகத்தான் இருக்கும் எனவே இதற்காக இயற்கை நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவது மற்றும்மொரு சிறந்த வழியாகும். தொடர்ந்தும் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதால் விரைவில் மலட்டுத்தன்மையில் உள்ள நிலங்கள் இயல்புநிலைக்கு திரும்பிவிடும், வேர் வளர்ச்சி காற்றோட்டம், மக்கும் திறன் என பல விடயங்கள் அதிகரிக்கும். உயிர் உரங்கள் பற்றி சில தகவல்கள் கீழே பார்ப்போம்.

செடி தழைத்து வளர்வதற்கு உதவும் அசோஸ்பைரிலம், மணிச்சத்தை கொடுப்பதற்கு பாஸ்போபாக்டீரியா, சாம்பல் சத்தை கொடுப்பதற்கு போட்டாஸ் மொபைலின் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். செடிகளின் வேர்களுக்கு கிடைக்காத மண்ணிலுள்ள சத்துக்களை இந்த உயிர் உரமானது பயிர்களுக்கு எடுத்துக் கொடுப்பதால் பயிர் உடைய வளர்ச்சி முதல் மகசூல் வரை நன்றாக இருக்கும். மேலும் நுண்ணுயிர் உரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டு வரும்போது சரியான ஒரு இடைவெளியில் தரமான விளைச்சல் எடுக்க முடியும்.

நோய் தடுப்பு

நோய் தடுப்புக்கு நுண்ணுயிர் உரத்தை பயன்படுத்துவதே சிறந்தது அதில் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் போன்றவற்றை பயிர்களில் வரும் பாக்டீரியா, பூஞ்சாணம் போன்றவற்றை தடுக்கின்றது. மேலும் பயிர்களில் சேதம் விளைவிக்கும் பூச்சிகளை நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியை கொண்டு கட்டுப்படுத்த முடியும். கீழே சில முக்கிய பயிர்களுக்கு பயன்படுத்தும் உயிர் உரம் சிலவற்றை பார்ப்போம்.

கரும்புக்கு வேம், அசோஸ்பைரிலம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பக்டீரியா போன்ற உரங்களை பயன்படுத்த முடியும்.

நிலக்கடலைக்கு நல்ல விளைச்சலை பெற ரைசோபியம் எனும் உயிர் உரத்தை பயன்படுத்த முடியும்.

ஏனைய மற்றும் காய்கறி பயிர்களுக்கு பொதுவான ஒரு நுண்ணுயிர் உரம் வேம்.

இறுதியாக “கண் விற்று ஓவியம் வாங்க வேண்டாம்” எனும் பழமொழி கூறுவது போல நுண்ணுயிர்களை அழித்து அதை தீனியாக பயிர்களுக்கு வழங்கும் ரசாயன உரங்களை பாவிப்பதில் இருந்து தவிர்த்து, இயற்கையான முறையில் நுண்ணுயிர்களை பெருக்கி மண்ணின் வளத்தை மேம்படுத்துவோம்.